பாவலரேறுவின் வாழ்வும் போராட்டமும்
இளமைப் பருவம்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்; தம் வாழ்நாள் முழுவதும் தமிழ், தமிழர்,
தமிழ்நாட்டு நலம் காண விழைந்தவர்; தொடர்ந்து சிந்தித்தவர்; சிந்தித்ததைச் செயலாக்கியவர்.
தம் சொந்த நலனை எண்ணாதவர். கொண்ட கொள்கையில் உறுதியும் பற்றும் கொண்டவர். எதற்காகவும்
யாரிடமும் சமரசம் செய்துகொள்ளாத ஓய்வறியாப் போராளி. தமிழ்ச்சமூகம் எண்ணற்ற தமிழ்ப்
போராளிகளைக் கண்டுள்ளது. போராளிகளில் தனித்துவம் மிக்க போராளி பாவலரேறு. தாம் வேறு
தம் குடும்பம் வேறு என்று வகை பிரித்துக் களமாடுவோர் நடுவில், தம் முழுக் குடும்பத்தையும்
தமிழ்ப் பகையறுக்கும் கருவியாக்கிக் களமாடியவர். தாம் பட்ட துயரங்களை எல்லாம் தமிழுக்காக
மனமுவந்து ஏற்றவர். ஒற்றை வரியில் கூறுவதென்றால், தமிழின் மேன்மைக்காக உழைத்தவர்களில்
தமிழைப் போற்றியதற்காக அதிகத் துன்பத்துக்குள்ளானவர், சிறைக்குள்ளானவர் இவரேயாவார்.
அதிகப் பாடனுபவித்ததும் இவர் குடும்பமேயாகும்.
தமிழையே உயிர்த்துடிப்பாகவும் - உணவாகவும் - உயிராகவும் - உறைவிடமாகவும்
- தாயாகவும் - சேயாகவும் - உற்ற துணையாகவும் - இறைமையாகவும் யாவுமாக எண்ணிய, இந்த அறிஞரின்
இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். 10.03.1933 அன்று சேலம் மாவட்டத்தில்
சமுத்திரம் என்ற சிற்றூரில், திரு. துரைசாமி - குஞ்சம்மாள் ஆகியோர்க்கு இரண்டாவது குழந்தையாகப்
பிறந்தார்.
பள்ளிப் பருவத்திலே தமிழார்வம் மிக்கவராய்த் திகழ்ந்தார் பாவலரேறு.
6 ஆம் வகுப்பு படிக்கும்போது ‘குழந்தை’ என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். அதனால்
பள்ளியில் குழந்தை ஆசிரியர் என்று அழைக்கப்பட்டார். கௌளி, அருணமணி, அருணன் என்ற புனை
பெயர்களைச் சூட்டிக்கொண்டார். எட்டாம் வகுப்பு படிக்கையில் ‘மலர்க்காடு’ என்னும் கையெழுத்து
இதழை நடத்தினார். அவ்விதழில் ‘அருணமணி’ என்னும் புனைபெயரில் எழுதலானார். அதன்பிறகு
தம்முடைய பதின்மூன்றாம் வயதில் ‘மல்லிகை’ என்னும் முதற் பாவியத்தைப் படைத்தார். மல்லிகையைத்
தொடர்ந்து ‘பூக்காரி’ என்னும் பாவியத்தை எழுதினார். அப் பாவியமே ‘கொய்யாக்கனி’ என்னும்
பெயரில் பின்னாளில் வெளியாகியது.
பாவலரேறுவின் இளம் பருவத்தில் தமிழார்வம் தாமாகவே ஊற்றெடுத்திருந்தாலும்,
அவ்வூற்றைப் பெருக்கெடுக்கச் செய்ததில் அவருக்கு வாய்க்கப் பெற்ற ஆசிரியப் பெருமக்களின்
பங்கு குறிக்கத்தக்கதாகும். பள்ளிப் படிப்புக்குப்பின் இரண்டு ஆண்டுகள் இடைநிலை (Intermediates) என்கிற கல்விநிலை அது கல்லூரியில்தான்
இருந்தது. சேலம் நகராண்மைக் கல்லூரியில் அப்படிப்பில் சேர்ந்த பாவலரேறுவிற்கு மொழி
ஞாயிறுதேவநேயப் பாவாணர், உலகஊழியனார், காமாட்சி குமாரசாமி ஆகிய பெருமக்கள் ஆசிரியர்களாக
வாய்த்தனர். ஆகவே, பாவலரேறுவின் தமிழார்வம் முன்னிலும் பன்மடங்காக வளர்ந்தது.
இல்லறம்
25.04.1951 ஆம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த
சின்னசாமி - செல்லம்மாள் ஆகியோரின் மகள் கமலம் என்பவரைத் தம்முடைய இல்வாழ்க்கைத் துணையாக
ஏற்றார். கமலம் என்பது சமற்கிருதம் ஆகையால், பின்னாளில் தாமரை என்று தமிழ்ப்படுத்திக்
கொண்டார். தாமரை அம்மையார் பாவலரேறுவின் தமிழ்ப் பணிச் சுமைக்குத் துணைத் தோள் கொடுத்த
பெருந்தகை ஆவார். பாவலரேறு – தாமரை அம்மையார் இணையருக்குப் பொற்கொடி, பூங்குன்றன்,
தேன்மொழி, செந்தாழை, பொழிலன், பிறைநுதல் என நான்கு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும்
பிறந்தனர். பாவலரேறுவைப் போன்றே இவர்களும் தமிழுக்காக ஆக்கப்பூர்வமாகத் தொடர்ந்து இயங்கி
வருபவர்கள். போலி - பகட்டு ஏதுமில்லாமல், விளம்பர வெளிச்சத்தை விரும்பாமல் தமிழ்ப்பணி
ஆற்றிவரும் பெரும் தகைமையாளர்கள் ஆவர்.
அரசுப் பணிகள்
1952 -
1954 வரை சேலத்தில்
கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வராகவும், கணக்காய்வராகவும் பணியாற்றினார். பின்னர், ஓசூர்,
அஞ்செட்டி என்னும் பகுதியில் வனத்துறையில் எழுத்தராகப் பணியமர்ந்து, சில காலம் பணியாற்றினார்.
1954 ஆண்டின் இறுதியில் புதுவையில்
அஞ்சல் துறையில் எழுத்தராகப் பணிவாய்ப்புக் கிட்டிற்று. புதுவையில் அஞ்சல் துறையில்
எழுத்தராகப் பணியில் அமர்ந்த பாவலரேறுவிற்கு, அன்றைய காலக்கட்டத்தில் தமிழ் இளைஞர்களுக்கு
எழுச்சியூட்டும் கவிஞராகத் திகழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஈடில்லா நட்பு வாய்த்தது.
இதன்மூலம் தமிழார்வம் மேலும் பன் மடங்கு கூடித் தழைத்தது.
1961 முதல் 1967 வரை கடலூர் அஞ்சலகத்தில் துணை அஞ்சல் தலைவராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் இளைஞர்களின் மனத்தில் சுடர்விட்டெரிந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில்
பெரும் வீறுடன் போராடினார். அதன் பயனாகச் சிறைத் தண்டனை பெற நேர்ந்தது. ஆகவே, சிறைத்
தண்டனையைக் காரணம் காட்டி அஞ்சலகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த எதிர்ப்பின்போது
கனல் தெறிக்கும் பாடல்கள் இவரிடமிருந்து வெளிப்பட்டன. ஆட்சியாளர்களின் இந்திச் சார்புணர்வைக்
கண்டித்து எழுதியதால் ஆட்சியாளர்களின் எதிர்ப்பை மிகுதியும் சேர்த்துக்கொண்டார். அதனால்
17.11.1965 முதல் 16.1.1966 வரை சிறைத் தண்டனை அனுபவித்தார்.
அரசுப் பணி இழந்தாலும்
அரசின் எதிர்ப்பாளர் என்று முத்திரையிடப்பட்டு இன்னல்களுக்கு ஆளானபோதும், அதனைக் கண்டு
தம் நிலையைச் சற்றும் தளர்த்திக் கொள்ளாதவர். அடக்குமுறைகளையே தம்முடைய ஆற்றலுக்கு
உரிய ஊட்டமாக மாற்றிக் கொண்டார். கொடிய வறுமை இறுக்கியபோதும் தம் வீரியத்தைக் குறைத்துக்
கொள்ளவில்லை. இந்தித் திணிப்பு எதிர்ப்பில் கடுமையாகப் போராடிப் பல இன்னல்களுக்கு ஆளானபோதும்,
பின்னாளில் இந்தி எதிர்ப்புக்காகச் சிறை சென்ற மொழிப்போர் வீரர்களுக்கான எந்தச் சிறப்புச்
சலுகையையும் ஊதியத்தையும் பெறுவதற்கு விரும்பவில்லை.
தமிழகத்தின் முதலமைச்சர்களாக
விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன் ஆகியோருடன் அறிமுகம் கிட்டியிருப்பினும்
அதனைத் தமக்கு வாய்ப்பாகக் கருதி, எவ்வகைப் பயனும் அடைய முற்படவேயில்லை.
இயக்க நிலைப்பாடுகளும்
சிறை வாழ்வும்
தென்மொழி மே 1966 ஆம் ஆண்டு இதழில் தமிழக விடுதலை
இயக்கம், என்ற இயக்கம் விரைவில் தொடங்கப்படவிருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் நடைபெற்று
வருவதாகவும் அறிவிப்பைப் வெளியிட்டார். ஆனாலும் அவ்வியக்கம் கால்கோள் கொள்ளவில்லை.
5, 6 அக்டோபர் 1968 தனித்தமிழ்க் கழக மாநாடு திருச்சியில் நடத்தப்பெற்றது.
அந்த மாநாட்டில் ‘உலகத் தமிழ்க் கழகம்’ என்னும் அமைப்பு உருவாக்கம் அடைந்தது. மொழி
ஞாயிறு பாவாணரைத் தலைவராகக் கொண்ட அந்த அமைப்பில் முனைவர் மெ. அழகனார் துணைத் தலைவராகவும்,
பாவலரேறு பொதுச் செயலாளராகவும், புலவர் இறைக்குருவனார், துணைப் பொதுச் செயலாளராகவும்,
செங்கை செந்தமிழ்க் கிழார் பொருளாளராகவும் பொறுப்பு ஏற்றனர். உலகத் தமிழ்க் கழகத்தின்
முதல் ஆண்டு மாநாடும், திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு விழா மாநாடும் 27,28-12-1969இல் பரமக்குடியில் நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகள் கழித்து உலகத் தமிழ்க் கழகத்தின் இரண்டாவது மாநாடு 9.1.1971 அன்று மதுரையில் நடைபெற்றது. சில காரணங்களால்
பாவலரேறு உலகத் தமிழ்க் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகி இருந்தாலும்,
அந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
10,
11-6-1972 ஆம்
ஆண்டு தமிழக விடுதலை மாநாட்டைத் திருச்சியில் பாவலரேறு அவர்கள் அமைப்பாளராக இருந்து
நடத்தினார். தென்மொழிக் ‘கொள்கைச் செயற்பாட்டு மாநாடு’ என்கிற தலைப்பில் நடைபெற்ற அந்த
மாநாட்டில் மிகப்பெரிய பேரணியும் நடத்தப்பெற்றது. 1973
ஆண்டு இவ்வியக்கத்தின் இரண்டாம் மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தந்தை
பெரியார் வாழ்த்திச் சென்றார். இந்த இயக்கத்தின் மூன்றாம் மாநாடு சென்னைக் கடற்கரையில் 1975 ஆம் ஆண்டு நடைபெறும் என்று அறிவித்தார். மாநாடு நடைபெறவிருந்த
முந்தைய நாளில் பாவலரேறு உள்ளிட்ட 22 பேர் சிறைப்படுத்தப்பட்டனர்.
முதல்வராக இருந்த கலைஞர் அரசு தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையைக் கைவிடுவதாக எழுதிக்
கொடுத்தால் சிறையிலிருந்து விடுதலை செய்வதாகக் கூறியது. அப்படி ஒரு விடுதலை தமக்கு
வேண்டாம் எனக் கூறி மறுத்தார் பாவலரேறு. அதன் விளைவாக 56 நாள்கள் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. ஆயினும்,
பின்னாளில் உலகத் தமிழ்க் கழகத்தின் 4-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது.
மொழி ஞாயிறு பாவாணர் தலைமையில் நடைபெற்ற அம் மாநாட்டில், கலைஞர் கருணாநிதி அவர்களும்
கலந்துகொண்டு உரையாற்றினார்.
தம் கொள்கைகளுக்கும் மொழி நலனுக்கும் ஊறு நேருமெனில் எவ்விடமாயினும்
தம் எதிர்ப்பைப் பதிவு செய்வதில் பாவலரேறு தயங்காதவர். தமிழக அரசு கொண்டு வந்த எழுத்துச்
சீர்திருத்தம் பற்றிக் கருத்தறிவிக்கையில், கலப்புத் தமிழே நடைமுறைப் பயன்பாட்டில்
இருக்கையில், தூய தமிழைக் காக்கிற வகையிலான மொழிச் சீர்திருத்தமே முதல் தேவை என்றும்,
எழுத்துச் சீர்திருத்தம் பிறகே செய்யப்பெற வேண்டுவது என்றும் பாவாணரும் பாவலரேறும்
ஒருமித்துக் கருத்தை வெளிப்படுத்தினார்கள். அதன்பிறகு தம்முடைய கருத்துக்கு உரிய இடமில்லாமையால்
பாவாணரும் பாவலரேறும் தமிழக அரசு கூட்டிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பாவலரேறு எவரோடு இணைந்து செயல்பட்டாலும் தம்முடைய நிலைப்பாட்டினைச்
சற்றும் மாற்றிக்கொள்ளாமல் செயலாற்றினார். கடவுள் மறுப்பையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட
திராவிடர்க் கழகத்தின் கூட்டங்களுக்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட பாவலரேறு
திராவிடர்க் கழகம் ‘கடவுள் மறுப்பை முதன்மைப்படுத்துவதை விட்டுத் தமிழின நலன் நோக்கில்
முழுமையாகப் பணியாற்றிட வரவேண்டும்’ என்று குறிப்பிட்டார். திராவிடர்க் கழகம் நடத்திய
இந்தி எதிர்ப்புப் போராட்டம், 30.03.1981
அன்று குடந்தையில்
நடைபெற்ற பார்ப்பன வல்லாண்மை ஒழிப்பு மாநாடு, மேட்டூர், சென்னை, இலால்குடி போன்ற இடங்களில்
நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றுத் தம்முடைய கருத்தை வெளிப்படுத்தினார். 1981 ஆம் ஆண்டு திராவிடர்க் கழகம் ஒருங்கிணைத்த மனு நூல்
எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைப்பட்டார்.
இந்தியாவின் முன்னாள்
தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் இறந்தபின், அவருடைய சாம்பல் இந்தியா முழுவதும்
மக்களின் வணக்கத்திற்குக் கொண்டு சென்று பரப்பப்பட்டபோது, அதன் மூட நம்பிக்கையை எதிர்த்தும்,
அதனைத் தடை செய்யக் கோரியும் பாவலரேறு அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்தார். அந்த வழக்கைத் தாமே நேர்நின்று தமிழில் வழக்காடினார். இதனால் பல்வேறு
இன்னல்களுக்கும், கொலை மிரட்டல்களுக்கும் ஆளானார். எனினும் இவ்வழக்கு, தேசத்தின் புனிதத்தைக்
குற்றப்படுத்துவதாகவும், காலம் கடந்த முறையீடு எனவும் கூறித் தள்ளுபடி செய்யப்பெற்றது.
இட்ட சாவம் முட்டுக
- இட்ட சாவம் முட்டியது
நந்திக்கலம்பகம்
என்னும் சிற்றிலக்கியம் படைக்கப்படுவதற்கான கதை தமிழில் பல நூற்றாண்டுகளாக வழங்கப்படுவருகிறது.
இது தமிழில் அறம்பாடுதல் என்கிறதான ஓர் இலக்கிய வழக்கம் இருந்ததைக் குறிப்பிடுகிறது.
பாவலரேறுவின் தமிழாற்றலின் வலிமை - அறம்பாடுதல் என்பது அவருடைய வாழ்விலும் நடந்தேறியுள்ளது.
முன்னாள் பிரதமர் திரு. இராஜீவ் காந்தி ஈழத்தில் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டினை
மேற்கொண்டார். இந்தியாவிலிருந்து அமைதிப்படையை அனுப்பி வைத்தார். அப்படையினர் சில தவறான
செய்கைகளைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். இதனைக் கண்டு உள்ளம் நொந்த பாவலரேறு
இட்டசாவம் முட்டுக என்று அறம் பாடினார். பாவலரேறு தம் பாடலில் எவ்வாறு குறிப்பிட்டிருந்தாரோ
அதே வகையில் அந்தப் பிரதம அமைச்சர் பலியானார். அதைக் குறித்து இட்ட சாவம் முட்டியது
என்று அக் கவிதைமேல் விளக்கம் எழுதினார். இதையறிந்த
காவல்துறையினர் இது குறித்துப் பாவலரேறுவிடம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் உரிய
விளக்கம் அளித்தார் பாவலரேறு.
தமிழருக்கான
போராட்டங்கள்
1984ஆம் ஆண்டில் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், பெரியார்
சம உரிமைக் கழகம், அறிவியக்கப் பேரவை, தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக்
கட்சி நடுவண் சீரமைப்புக் குழு ஆகிய இயக்கங்கள் இணைந்து ‘தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி’
என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. அதன் அமைப்புக் குழுவின் பொறுப்பாளராகப் பாவலரேறு
செயல்பட்டார். பின்னர் ‘தமிழின எதிர்காலத் தீர்மானிப்பு மாநாடு’ என்னும் மாநாட்டை 27, 28 திசம்பர் 1986 ஆம் ஆண்டு பாவலரேறு அவர்களின்
ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டோரிடம் வாக்கெடுப்பு முறையில்
தேர்தல் நடத்தப்பெற்றது. அதன்படி ‘தமிழ்நாடு முழு இறையாண்மையுடைய தனிநாடாகப் பிரிந்து
தமிழரே ஆளுமை செய்ய வேண்டுமென்ற கருத்துப் பெறப்பட்டது.
தமிழ் வழிபாட்டு மொழியாக வழங்கப்பட
வேண்டுமென்ற கோரிக்கை தமிழகத்தில் தொடர்ந்து ஓங்கி ஒலித்து வரும் ஒன்றாகும். இது குறித்துப்
பாவலரேறு 13.08.1987ஆம் நாளில் உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தார். அந்த வழக்கிற்காகத் தில்லி சென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழில்
தம்முடைய வாதத்தை முன்வைத்தார். அதேபோன்று தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில்
முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி 22.07.1990இல் தமிழ்நாடு இளைஞர் பேரவை,
தமிழ்நாடு மாணவர் பேரவை ஆகியவை இணைந்து நெல்லையில் நடத்திய தமிழ்வழிக்கல்வி மாநாட்டில்
பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார்.
இவ்விரு அமைப்புகளும் இணைந்து
கடலூரில் நடத்திய ஆளுமைச் சாதி ஒழிப்பு மாநாட்டில், தமிழீழ விடுதலை ஏற்பிசைவு(அங்கீகரிப்பு)
மாநாட்டில் கலந்துகொள்ள வேலூர் சென்றபோது சிறைப்படுத்தப்பட்டார்.
மறைமலை நகர் தொடர் வண்டி நிலையத்திற்கு
மறைமலை அடிகளாரின் பெயரே சூட்டப்பட வேண்டும் என வலியுறுத்திச் சட்மன்றத்துக்கு (Assembly) எதிரில் போராட முயன்ற பாவலரேறு அவர்களோடு பலரும்
சிறைப்படுத்தப்பட்டனர்.
திராவிடர் என்று கூறுவது தவறு என்றும், தமிழர் என்றே குறிப்பிட வேண்டும்
என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் பாவலரேறு. இதனை வலியுறுத்தும் வகையில் சனவரி 1994 தமிழ்நிலம் இதழில் அறிக்கையும் வெளியிட்டார். மேலும்
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோரைப் ‘பழந்தமிழர்’ என்றே குறிப்பிட வேண்டும் என்றும்,
‘ஆதிதிராவிடன்’ என்றோ, ‘அரிஜன்’ என்றோ தாழ்த்தப்பட்டவன் என்றோ, தலித் என்றோ பல்வேறு
பெயர்களால் அழைப்பதைத் தவறு என்று கூறி, ஏப்பிரல் 1994
தமிழ் நிலம் இதழில் அறிக்கையும் வெளியிட்டார்.
தமிழ்வழிக் கல்வி
யாவற்றையும்
பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல் அவற்றைச் செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளைப் பலவாறு
மேற்கொள்வது பாவலரேறுவின் இயல்பு. தமிழ்வழிக் கல்வி குறித்தான பேச்சும் செயலும் ஒன்றுபோல
அமைந்தது. 18.04.1994 தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி
தலைநகர்த் தமிழ்க் கழகத்தின் சார்பில் தமிழறிஞர்களின் முற்றுகைப் போராட்டம், சென்னை
- அண்ணாசாலை தொடங்கிச் சட்டப்பேரவை வளாகம் வரையிலும் நடைபெற்றது. அதேபோன்று 1995ஆம் ஆண்டில், தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தியும்,
தமிழில் படித்தோர்க்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரியும் தலைநகர்த் தமிழ்க்
கழகம் தொடர்ச்சியாக உண்ணா நோன்பு, ஆர்ப்பாட்டம், தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப்
போராட்டம், ஆங்கில அரசாணை எதிர்ப்புப் போராட்டம், சட்டப் பேரவை முற்றுகைப் போராட்டம்,
முதலமைச்சர் வீட்டுமுன் ஆர்பாட்டம் என்று நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பாவலரேறு
கலந்துகொண்டார்.
தஞ்சையில்
உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. தமிழுக்கு உரிய வகைகளில் ஆக்கம் செய்யாமல் வெறும் ஆரவாரப்
போக்கில் மாநாடு நடத்தப்படுவதை எதிர்த்துப் பாவலரேறுவின் தலைமையில் தமிழறிஞர்கள் அணிதிரண்டு
உண்ணாநோன்புப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். காவல்துறை கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டது.
இப்போராட்டத்தில் பாவலரேறு, அவரின் துணைவியார் தாமரை அம்மையார், மகள் பொற்கொடி உள்ளிட்ட
பலரும் தாக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைநகர்த்
தமிழ்க் கழகம் தமிழே பயிற்றுமொழி, ஆட்சி மொழியாக்கப்பட வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து
மாபெரும் பேரணியை 29.04.1995 அன்று நடத்தியது. இந்தப் பேரணியில்
பாவலரேறு தம் குடும்பத்தாருடன் கலந்துகொண்டார். பேரணி தடுக்கப்பட்டு அனைவரும் சிறைப்படுத்தப்பட்டனர்.
பாவலரேறு சிறைப்படுத்தப்பட்ட தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோரிடையே சொற்பொழிவாற்றினார்.
அந்தச் சொற்பொழிவே அவருடைய இறுதிச் சொற்பொழிவாக அமைந்தது.
பாவலரேறுவின்
இறுதி ஊர்வலம்
தமிழின் நலமொன்றையே விரும்பிய போராளிக்குத் தன்னலம்
பேணுவதற்கு மறந்துபோனது. கருத்தாலும் செயலாலும் தமிழ்ப் பகைவர்களால் வீழ்த்த முடியாத
பாவலரேறுவை உடல்நலக் குறைவு வீழ்த்தி வெற்றிகொண்டது.
எதுவரை எம்மூச்சு இயங்கு கின்றதோ
எதுவரை எம்உடல் இம்மண் தோயுமோ
எதுவரை எம்மனம் நினைவலை எழுப்புமோ
அதுவரை மொழி, இனஆர்ப்பு அடங்காது
என்று எழுதியதோடல்லாமல், தம் வாழ்வையும் அவ்வாறே தகவமைத்துக்
கொண்டு இயங்கிய, தமிழன்னையின் போர்க் கேடயம் பழுதடைந்தது. தமிழுக்கான போராட்ட வரலாற்றில்
வியப்புக் குறிகளைப் பதித்த பாவலரேறு 11.06.1995 அன்று முற்றுப் புள்ளி வைத்தார்.
ஆம், தமிழுக்காக இயங்கிய மூச்ச நின்று போனது. தமிழின மேய்ப்பர் தம் மக்களைத் தத்தளிக்கச்
செய்து போன நாளது.
பல்வேறு
அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் அன்பர்கள், அறிஞர்கள், இயக்கத் தலைவர்கள், பொதுமக்கள்
ஆகியோர் பங்குபெற்ற மாபெரும் இறுதி ஊர்வலம் சென்னை தியாகராயர் நகரிலிருந்து வேளச்சேரி
வழியாக மேடவாக்கம் வரையிலும் 16 கி.மீ. நடைபெற்றது. இறுதியில்
மேடவாக்கத்தில் பாவலரேறு உடல் அடக்கம் செய்யப்பெற்றது. அங்கு நினைவிடம் அமைக்கப்பெற்றுப்
‘பாவலரேறு தமிழ்க்களம்’ என்னும் பெயரால் அழைக்கப்பெற்று வருகிறது.
No comments:
Post a Comment