உலகியல் நூறு
தமிழ்ச் சமூகம் தனக்கென பல்வேறு
சிறப்புகளைத் தன்னகத்தே அடைகாத்து வருகின்றது. அவற்றுள் ஒன்று அறம் என்பதாகும். அறங்கள்
எவை எவை என்ற கருத்து மோதல்கள் இருப்பினும், அறம் சார்பான கருத்துகளும், பேச்சுகளும்
தமிழ்ச்சமூகத்தில் இடையறாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அறம் குறித்த புரிதல், அறம்
சார்ந்த விழுமியங்கள் யாவும் தமிழ்க்கூறும் நல்லுலகில் எளிதாகப் புலப்பட்டாலும் நூல்களில்
மிகக் குறைந்த அளவே அறத்திற்குரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகம் யாவற்றுக்கும் பொதுமையில்
அறம் பாடிய நூல்களில் திருக்குறள் சிறப்பிடம் பெறுகின்றது. நாலடியாரும் அந்த வரிசையில்
இடம்பெறுகிறது. அறம் சார்ந்த உரையாடல்கள் பெரும் காலவெளியில் தொடர்ந்து வந்தாலும் அதனை
நூல்களின் வழியாக வெளிப்படுத்தியது மிகக் குறைவேயாகும். அற நூல் ஆக்கும் ஆசிரியனுக்கு
அறம் குறித்துப் பாடுவதில் மிக நுட்பமான அறிவும், சமூகத்தை தொடர்ந்து உற்றுநோக்கலும்
இன்றியமையாத பண்பாகும். அந்த வகையில் சமூகத்தின் மீது தொடர்ந்து தம் கவனத்தைச் செலுத்திவரும்
பாவலரேறு உலகியல் நூறு என்னும் இந்நூலைப்
படைத்தளித்ததில் மிகுந்த பொருத்தப்பாடுண்டு.
தமிழின் மிகக் குறைந்த எண்ணிக்கையில்
உள்ள அற நூல் வரிசையில் பாவலரேறுவின் உலகியல் நூறு என்னும் நூலும் அடங்கும். 1973 - 74 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட
காலப் பகுதியில் எழுதப்பட்ட இந்நூல் 20 இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலினுள்ளும்
5 நிலைகள் குறுந்தலைப்புகளாக மொத்தம் 100 பாடல்கள்
உள்ளன. இவை அனைத்தும் வெண்பாவினால் ஆனவை. இந்த நூலில் பிறமொழிச் சொற்கள் ஏதும் இடம்பெறவில்லை
என்பது இதன் மற்றுமொரு சிறப்பாகும். பாவலரேறுவின் செம்மையான தனித்தமிழ் நடையினால் நடைபயிலுகிறது
இந்நூல்.
உலகியல் என்னும் இயலில் தொடங்கி இறைமையியல்
என்னும் இயலில் நிறைவுறுகிறது. இயல்வைப்பு முறையிலும், இயலின் உட்பிரிவான நிலைகளிலும்
ஓர் ஒழுங்கமைவும், உட்பிணைப்பு நிலையும் சங்கிலித் தொடர்போல் காணப்படுகிறது. பொதுவாக
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற சிந்தனையோட்டத்துடன் இடையறாது இயங்கும் பாவலரேறு,
இந்த நூலில் தமிழினச் சார்புக் கருத்தையோ அல்லது ஆளுமை செலுத்தும் பிற இன எதிர்ப்புக்
கருத்தையோ இம்மியளவும் வெளிப்படுத்தவில்லை. தாம் எவ்கையான இலக்கியத்தைப் படைக்க முயல்கிறாரோ
அவ்விலக்கியத்திற்கான இலக்கணம் என்னவென்பதை உள்வாங்கி இலக்கணம் மீறாத இலக்கிய உருவாக்கத்தை
மேற்கொள்ளும் பாங்கு மெச்சத்தகுந்தது.
எளிமையான சொற்களின் சேர்க்கையால்
உருவாக்கப்பட்ட இந்நூல், பொருளாழம் மிக்கவை. வாழ்வியல் நுணுக்கங்களின் பிழிவாக அமைந்துள்ளது. இருமுறை படித்தால்
விரைவில் மனத்தில் ஒட்டிக்கொள்ளும் தன்மையிலான இந்நூலில் திருக்குறளின் கருத்துப்போல்
கருத்து ஒருமைப்பாடு மிளிர்கிறது. உலகின் முதன்மையான நிகழ்வுகள், அந்நிகழ்வுகளை எளிதில்
உணர வைக்கும் எளிய சொல்லாட்சிகளால் ஆன உவமைகள் கையாளப்பட்டுள்ளன. சான்றாக,
ஓவத் துணுக்கால் உருவறியார் ஒவ்வொன்றா
மேவத்துடிக்கும் மிகை உருவம் (20 : 5)
பெரிய ஓவியத்தைப் பல துண்டுகளாகக்
கிழித்து, ஒவ்வொரு துண்டையும் கொண்டு முன்பின் பார்த்தறியாத உருவத்தை - தம்முடைய கற்பனைக்கேற்றவாறு
ஓர் உருவத்தை உருவாக்கிக்கொண்டு இதுதான் கடவுள் என்கிற மனப்போக்கு இருப்பதாகக் கூறுகிறார்.
இதுபோன்ற எண்ணற்ற உவமைகள் கையாளப்பட்டுள்ள திறம் வியக்கவைக்கிறது. கற்பனைச் சிறகுகள்
விரிப்பதில் உச்சம் தொடுகிறார் பாவலரேறு.
தமிழ்ச் சமூகத்தில் குடும்பம்
ஒரு வலிமையான அமைப்பாகும். எனினும் சில வேளைகளில் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுக் குடும்பங்கள்
அதன் அடிப்படை பொருளை இழந்து விடுகின்றன. பாவலரேறுவின்
ஆக்கங்களில் தமிழ் இன, மொழி சார்புக் கருத்துகளுக்கிணையான
இடத்தைக் குடும்பம் பெறுகின்றது. குடும்ப உறவில் காணப்படுகின்ற மெல்லிய அழகிய உணர்வுகளைப்
பதிவிடுவதில் - செப்பமிடும் கருத்துகளை முன்வைப்பதில் - குடும்பங்கள் கொண்டொழுக வேண்டிய
கருத்துகளை சுவைபட முன்வைப்பதில் தேர்ந்தவர் பாவலரேறு. இதனை மகபுகுவஞ்சி, ஐயை, பாவியக்
கொத்து உள்ளிட்ட நூல்களைப் படிக்கும்போது எளிதில் உணரலாம். இந்த வரிசையின் தொடர்ச்சியாக
உலகியல் நூறு நூலினுள்ளும் குடும்பவியல் என்னும் இயலில் 5 நிலைகளை விளக்குகிறார்.
கொம்பாய் கொழுவாய் குடையாய் குடும்பமெனும்
இம்பருல காட்சிக்கோ ரேணியாய்ச் - செம்பாதி
கொண்டுங் கொடுத்துங் குடிப்பெருக்கி ஆளுதலே
மண்டுங் கணவனது மாண்பு (6 : 2)
பிறப்பிற் பொருந்தி பிழையாத அன்பால்
மறப்பின்றி இன்பம் மடுத்துச் – சிறப்புறவே
வாங்கி வகுத்து வாங்கி மகிழ்வித்துத்
தாங்கல் மனையாள் தகை (6 : 3)
என்று கணவன் கொண்டொழுக வேண்டிய இயல்புகளையும் அவ்வியல்புகளைப்
பின்பற்றுவதே பெருமையும் ஆகும் என்கிறார். மனைவி பெற்றிருக்க வேண்டிய பண்புகளை வரையறுத்து அவையே அப்பெண்ணிற்குச் சிறப்பென்கிறார்..
குடும்பவியலை காதல் என்கிற அடித்தளத்தின் மீதே கட்டமைக்க
அதனை முன்னிலைப்படுத்துகிறார்.
குடும்பம் என்கிற அமைப்பினுக்கு
அடுத்த நிலையில் காணப்படும் சமூகத்தின் ஒழுங்கமைவிற்கு நல்லாட்சி மிகமுக்கியம் என்கிறதான
கருத்தை முன்வைத்து, நாட்டியல் என்னும் இயலில் ஆட்சிநிலை அமையும் தன்மைகளை சுட்டிச்செல்கிறார்.
நல்லாட்சி எது என்பது போன்ற கருத்துகளைக் கூறுவதில்
கையேடாகக் காணப்படுகிறது இந்நூல். நல்லாட்சிக்கு உறுதுணையாகின்ற சட்டநிலையின் உண்மைத்
தன்மையை எக்காலத்தும் பொருந்துகின்ற வகையில் நயத்துடன் உரைக்கிறார்.
அமைத்த வதிகாரத் தாள்வோர்க்குச் சார்பாய்
சமைத்துக் கொளும்நெறியே சட்டம் - இமைத்துரைப்பின்
ஆனைக் குழுசெய் யறநெறியாங் கோரேப்
பூனைக் குதவுமெனல் பொய் ( 2 : 2)
புடவி என்கிற பிரபஞ்சத்தைக் கடந்த நிலையையும் சமூகம், குடும்பம், தனிமனித நிலையில் ஆண் - பெண் உறவுநிலை, அவர்களின்
இல்லற வாழ்வின் மிக நுண்மையான கூறுகள், பிறப்பு - இறப்பு, ஆட்சி நிலை, இறைமை என யாவற்றையும்
உள்ளடக்கி மிகச் சுருங்கிய அளவிலான நூலாயினும் பெரும் பருப்பொருள்களைத் தாங்கிய பிழிவாக
விளங்குகிறது இந்நூல். ஒவ்வொரு நிலையிலும் காணப்படுகின்ற மெய்ம்மங்களைச் சுவைபட கோத்துள்ள
இந்நூலின் திறம் தமிழுக்குக் கிடைக்கப்பெற்ற ஓர் அரிய பெட்டகமாக விளங்குகிறது.
No comments:
Post a Comment