பாவேந்தர் என்னும் நாடக வேந்தர்
தமிழ் இலக்கிய வரலாற்றைப் புரட்சிக் கவிஞரைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அது போன்றே பாரதிதாசனை எழுதுவோர் ச.சு.இளங்கோ என்னும் அறிஞரின் ஆய்வுகளைத் தாண்டி செல்ல முடியாது. பாரதிதாசனின் ஓர் எழுத்தாகிலும் பதிவின்றிப் போகக் கூடாது என்ற மிகத் தீவிரத் தன்மையுடன் இயங்கியவர். புரட்சிக் கவிஞரை அவரை விடவும் அதிகம் அறிந்தவர் ச.சு.இளங்கோ. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கருத்தை ஏற்றுத் திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையை இடையிலேயே நிறுத்திக் கொண்டார் பாவேந்தர். மேலும் அதனை அச்சாக்கும் முயற்சியையும் தவிர்த்தவர். புரட்சிக் கவிஞர் எழுதிய திருக்குறள் உரையை பாரதிதாசன் திருக்குறள் உரை (ஆய்வும் பதிப்பும்) என்னும் பெயரில் நூலாகக் கொண்டுவந்தவர் ச.சு.இளங்கோ. சுற்றுலாச் செல்லும் பள்ளிச் சிறுவனைப் போல பெருவிருப்பத்துடன் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிப்பதில் பேரார்வம் மிக்கவர் அவர்.
பொதுவாகத் தமிழ்ச் சூழலில் பன்முகத் தன்மைகள் கொண்ட ஆளுமைகள் ஏதேனும் ஒரு துறையைச் சார்ந்தே அடையாளங் காட்டப்படுவது வழக்கமாக உள்ளது. பெரியார் தன்னுடைய கருத்தியல் - போராட்டம் சார்ந்து அறியப்படுவதுபோல் அவருடைய எழுத்தின் வழியே அறியப்பட்டது மிகக் குறைவே. அறிஞர் அண்ணா அரசியல் சார்ந்து அறியப்படுவதைப் போன்று அவருடைய எழுத்தின் வழியே வெகு மக்கள் அறிந்தவை சொற்பமே. அதுபோன்றுதான் பாரதி தாசனைக் கவிஞராக அறிந்ததைப் போன்று நாடக ஆசிரியராக இந்தச் சமூகம் அறிந்திருக்கவில்லை. எனவே, புரட்சிக் கவிஞரின் மாறுபட்ட பெரிதும் அறிந்திராத வேறொரு கோணத்தைத் தம்முடைய மாளாத வேட்கையினாலும் பற்றினாலும் பாரதிதாசனின் 47 நாடகங்களைத் தேடிப்பிடித்து ஆய்வுக்குட்படுத்தி அழகிய நூல் வடிவில் நம் கையில் தவழ வைத்துள்ளார் ச.சு. இளங்கோ. பாரதிதாசனின் நாடகங்கள் - ஓர் ஆய்வு என்பதே அந்நூலின் தலைப்பாகும். இவர் ஆய்வுக்குட் படுத்தியுள்ள 47 நாடகங்களில் 4 நாடகங்கள் நூலாக்கம் பெறாதவை. 11 நாடகங்கள் கையெழுத்துப் பிரதிகளாக இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியச் சூழலில் நாடகம் இன்றுவரை கொள்கைகளைப் பறைசாற்றுவதற்கு உகந்த கருவிகளில் ஒன்றாக இருந்து வருவது குறிக்கத்தக்கது. தொடக்கக் காலத்தில் புராணங்கள், அவதார புருஷர்கள் ஆகியோரின் பெருமையினைப் பறைசாற்றவும், இறை நம்பிக்கையை ஊட்டவும் பயன்பட்ட நாடகங்கள், பின்னாளில் தம்முடைய கொள்கைகளை மக்கள் மன்றத்தில் எடுத்துவைக்கின்ற கருவியாக மாற்றம் கண்டது. விடுதலை உணர்வை ஊட்டவும் வெள்ளையருக்கு எதிராக மக்களைத் திரட்டவும் நாடகங்கள் பெருமளவில் பயன்பட்டன. திராவிட இயக்கத்தின் வீச்சு நாடகங் களின் வழியேயும் வெளிப்பட்டன. அதனால்தான் தாம் நூறு மேடைகளில் பேசுவதினால் எழுகின்ற விழிப் புணர்வை, அண்ணாவின் ஒரு மேடை நாடகம் செய்து விடும் என்று வெளிப்படையாகக் கூறினார் தந்தை பெரியார்.
எனவே, முத்தமிழில் ஒன்றாகிய நாடகத்தமிழில் தொடக்க காலத்தில் இருந்த குறைபாட்டைப் போக்கும் வகையில் அதை நல்லறிவூட்டுவதற்கு ஏற்ற கருவியாக இலகுவாக மடைமாற்றம் செய்தவர் பாவேந்தர். அந்த நடுப்புள்ளியின் அடிப்படையிலேயே புரட்சிக் கவிஞரின் நாடக ஆக்க முயற்சிகள் அமைந்தன. அதனைக் குறித்து ‘தமிழ் இன்பம்’ நூலில் பாரதிதாசன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இந்நாட்டில் நாடகங் களின் நிலை எப்படி உள்ளது? மறைந்திருந்து வாலியைக் கொன்றவன் கதையையா இந்நாளில் நம் இளைஞர் காணும்படி விடுவது?
அண்ணியார் மதியாத காரணத்தால் தான் பெற்ற ஏழு பிள்ளைகளையும் அலற அலறக் கிணற்றில் தள்ளியவளைக் கற்பலங்காரி என்று காட்டும் நாடகத் தையா நம் மகளிர் காணும்படி விடுவது?
உடன் பிறந்தானின் உயிரையும் அவனின் நாட்டையும் பெருமையையும் அயலான் காலடியில் வைத்த அறக்கேடனை ஆழ்வான் என்று காட்டும் கதையைப் பார்க்க விடுவதா?
தழைந்த குடித்தனத்தின் தலைமகனைக் குழம்பு வைத்துக் கொடு என்று மொழிந்த பண்டாரத்திற்கு அவ்வாறே வழங்கிய கதை வழக்கொழிந்து போனால் போதும் என்றால், கண்ணீரைப் பொழிந்து விடும் ஆட்களுக்கு அறிவு புகட்ட வேண்டுமா? வேண்டாவா? (ப-15) என்ற கேள்விகளுக்குப் புரட்சிக்கவிஞரின் பதில்களே 47 நாடகப் படைப்பாக்கமாகும். புரட்சிக் கவிஞர் 47 நாடகங்களைப் படைத்துள்ளார் என்பதும் அவை பல்வேறு நிலைகளிலும் சமூக மேம்பாட்டிற்கு வழிகோலியவை என்பதும் தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலின் வழி அறிந்துகொள்ளும் முக்கியச் செய்தி யாகும்.
நாடகம் எழுதுவோர்க்குச் சமூகப் பற்றும் மக்களுக்குப் பயன்படும் வகையில் படைக்கும் குறிக்கோளும் இருக்க வேண்டியது அவசியமாகும். சமுதாயப் பயன்பாட்டை அளந்தறிந்து கொண்டு படைக்கும் படைப்புகளே நேர்மை வாய்ந்தவையாகும். (ப-13) என்று ச.சு. இளங்கோ அவர்கள் குறிப்பிடுவது புரட்சிக் கவிஞருக்கு முற்றாகப் பொருந்துபவை என்பதை இந்நூல் போக்கு எடுத்துவைக்கிறது.
பாவேந்தரின் நாடகங்களை முற்றாக ஆய்ந்த இந்நூலாசிரியர், திராவிட இயக்கப் பாசறையில் பயிற்சி பெற்ற பாவேந்தர். தமிழ்ச் சமுதாயத்தில் நிலவுகின்ற குறைபாடுகளைக் கடிந்துரைக்கும் நோக்கத்தோடும், புதிய வாழ்வுமுறையைப் பதிய வேண்டும் என்ற திட்டத்தோடும் இலக்கியப் பாங்கில் நாடகத்துறைப் படைப்புகளை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் சீர்திருத்தக் கொள்கைகளை முதன்மைப்படுத்தி நாடகங்களை ஆக்கியுள்ளார். வெறும் பொழுதுபோக்கும் வகையில் அவர் நூல்களையாக்கவில்லை. மாறாக நாட்டுக்கும் மொழிக்கும் மனித இனத்திற்கும் வளம் சேர்க்கும் நோக்கத்துடனே அவரது படைப்புகள் உருவாகியுள்ளன என்று பாவேந்தரின் நாடகங்கள் குறித்த ஆய்வு முடிவை இந்நூலின் தொடக்கத்திலேயே முன்வைக்கிறார். தொடர்ந்து அவர் கொண்டு செல்லும் ஆய்வுப்போக்கு அவருடைய ஆய்வு முடிவை மெய்ப்பிக்கும் சான்றுகளை நுட்பமாக எடுத்துக் கூறுவதை மையமிட்டு நகர்கிறது.
இது ஒரு நூல் என்ற அளவில் இருந்தாலும் இது ஒரு நூலல்ல. பல நூல்களாகப் படைக்கப்பட வேண்டி யதை ஒரு நூலாகத் தந்துள்ளார் இளங்கோ. ஏனெனில் உலக நாடக வரலாற்றை அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவுகிறது. போகிற போக்கில் கருத்துகளை அள்ளித் தெளித்துவிட்டு செல்லாமல், ஒவ்வொரு கருத்துக்கும் வலுவூட்டும் ஆழமான சான்றுகள் நூலெங்கும் உள்ளன. உலக நாடக இலக்கியத்தின் வரலாறு - அதன் தொடக்க நிலை - பரவலாக்கம் - மேலை நாடுகளில் நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கம் என நூறு பக்க அளவில் கருத்துகள் மையம் கொண்டுள்ளன. பாவேந்தரின் நாடகங்கள் வெறுமனே புனைவு இலக்கியம் என்கிற நிலையைத் தாண்டி சமூக அக்கறையும் மொழி, இனநல மேம்பாட்டு உணர்வும் இழையோடுவதை அறிந்துகொள்ள முடிகிறது.
பாவேந்தர் தமது நாடகங்களில் கையாண்ட யாப்பு வடிவம், பாவும் பாவினமும், பாவேந்தரின் நாடக இசைப்பாடல்கள், அவை அமைந்துள்ள இராகத்தைக் குறித்த எண்ணிக்கையோடு கூடிய விவரங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த புள்ளி விவரங்கள் துல்லியமாக அளிக்கப்பட்டுள்ளன. பாவேந்தரின் நாடகங்கள் இலக்கிய ஆய்வு, வரலாற்றாய்வு, கொள்கையின் அடிப் படையில் அமைந்த ஆய்வு, சமூக அடிப்படையில் அமைந்துள்ள ஆய்வாகவும் காணப்படுகின்றன. நாடகங்களின் சிறிய பகுதி முதற்கொண்டு நாடகத்தின் அனைத்துக் கூறுகளையும் ஆய்வுக்குட்படுத்தி பயணிக் கிறது. பாவேந்தர் என்னும் ஒப்பற்ற கவி வல்லாரின் மாறுபட்ட கோணத்தையும் அவரின் படைப் பாளுமையையும் சமூகப் பற்றையும் இந்நூல் எதிரொலிக்கிறது. முதுமுனைவர் ச.சு. இளங்கோ அவர்களின் ஆய்வுப்போக்கும் நடை ஒழுங்கும் யாவற்றையும் எடுத்துரைக்கும் பாங்கும் மிகவும் கச்சிதமாகக் காணப்படுகின்றன. இவர் பின்னிணைப்பாக அளித்துள்ளவை அவரின் உழைப்பின் அளவை நமக்குப் பறைசாற்றுகின்றன. பாவேந்தரின் நாடகங்களைக் கற்க விரும்புவோர்க்கு அடிப்படை விளக்கக் கையேடாகவும் ஆழ்ந்த புதிய கருத்துகளைத் தாங்கியும் அமைந்துள்ளது இந்நூல். பாவேந்தரின் நாடகங்களை எல்லாக் கோணங் களிலும் தீவிரமாக ஆய்ந்து கருத்துகள் முன்வைக்கப் பட்டுள்ளன. பாரதிதாசன் என்கிற மகத்தான பாவலனின் இருப்பை அழுத்தமாக எடுத்துவைத்ததில் இந்நூலுக்குத் தமிழ்க் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றிக்குரியதாகும்.
உங்கள் நூலகம் மார்ச்சு 2018 இதழில் வெளியாகியுள்ள டாக்டர் ச.சு.இளங்கோ அவர்களின் பாரதிதாசன் நாடகங்கள் - ஓர் ஆய்வு என்னும் நூல் குறித்து எழுதப்பட்ட விமரிசனம்.