Wednesday, 19 April 2017

இதழாளர் பாவலரேறு


   
                             இதழாளர் பாவலரேறு

தமிழில் வெளிவந்துள்ள இதழ்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தைத் தாண்டியுள்ளன என்பது ஒரு புள்ளிவிவரம் அளிக்கும் கருத்து. எண்ணிக்கை பெரியதாக இருந்தாலும் அவற்றால் மொழிக்கும் இனத்துக்கும் விளைந்த பயன் மிகக் குறைவே. தமிழ் இதழ்களின் வரலாற்றில் தென்மொழி ஒரு மைல்கல். அன்னைத் தமிழை மீண்டும் அரியணையில் அமர்த்தவும் பாவாணர் அவர்களின் தமிழ் ஆக்கம் நிறைந்த செயல்பாடுகளுக்காகவும்தென்மொழிஎன்னும் தனித்தமிழ் இதழ், பாவலரேறு அவர்களால் 01.08.1959 இல் தொடங்கப்பெற்றது.

தென்மொழி என்பது, தொடக்கத்திலும் சரி, இன்றும் சரி ஒரு கூட்டுமுயற்சியன்று. அவ்வக்காலங்களில் சிலர் துணைகளாகவும் தூண்களாகவும் அதன் வெளிப்பாட்டுக்கென உதவிய நிலைகள் உண்டெனினும் - அதனின் புறப்பாட்டிற்கும் ஆக்கத்திற்கும் அடிப்படை ஒற்றை மூலக்காரணகராக இயங்கியவர் பாவலரேறு என்று தென்மொழியின் விளைவுக்கு முழுமுதற் காரணம் பாவலரேறு என்கிறார் பேரா. . அருளியார் (தென்மொழியின் தொண்டு, - 4).

தென்மொழி இதழின் பொறுப்பாசிரியராகப் பாவலரேறுவும், புலவர் முதுகண்ணன், புலவர் . அழகன், பாவலர் . இலெனின் தங்கப்பா ஆகியோர் உறுப்பாசிரியர்களாகவும் விளங்கினர். தென்மொழி இதழின் பெயரை முன்மொழிந்தவர் பாவாணர் ஆவார். தென்மொழி இதழ் ஒன்றின் விலை 25 காசுகளாகும்.

தென்மொழி எனக்காகவன்று, தென்மொழிக்காக நான். தென்மொழிக்கே என் மூச்சு, பேச்சு, நடக்கை, செயல் எல்லாவற்றையும் அடிப்படுத்தி விட்டேன். என் மனைவி, மக்கள் இவர்கள் என்னைக் காக்க இருப்பதாவே நான் கருதுகின்றேன். நான் அவர்களைக் காப்பதாக என்றும் கருதியதில்லை. என் பிள்ளைகள் என்ன படிக்கின்றார்கள்? என் மனைவி என்ன விரும்புவாள் என்பதைவிட, என் தமிழர் எப்படி வாழ்கின்றனர்? எப்படி வீழ இருக்கின்றனர்? தமிழ் எப்படிப் புறக்கணிக்கப்படுகிறது? எப்படி உயர்த்தப்பட வேண்டியது? என்பவற்றில் எனக்கு  நாட்டம் மிகுதி. காலை நான்கு மணி முதல் நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை என் கை, கால், கண், உடல், மனம், உயிர் எல்லாம் தென்மொழிக்காகவே வேலை செய்கின்றன. இயங்குகின்றன. காரணம் தென்மொழி ஒன்றால்தான் தமிழர்க்கு ஏதாவதொரு விடிவைத் தேடித்தர இயலும் எனத் துடிக்கின்றேன். வழியைக் காட்டி விடக் குமுகின்றேன். முடியுமா? முடியாதா? என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் அஃது என்னைப் பொறுத்தது மட்டுமன்று. இம்மக்களைப் பொறுத்ததுமான செய்தி (பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்க்கைச் சுவடுகள். -119).

பாவலரேறு அரசுப் பணியில் இருந்தமையால் தம்முடைய பெயரில் படைப்புகளை வெளியிடாமல், பெருஞ்சித்திரன், மெய்மைப் பித்தன், தாளாளன், பாவுண்தும்பி, ஈட்டி என்னும் புனைபெயர்களில் எழுதினார்.

தம் பள்ளிப் பருவத்தில்குழந்தைஎன்னும் கையெழுத்து இதழும், பின்னாளில் அதன் பெயரை மாற்றி மலர்க்காடு என்ற பெயரில் நடத்தப்பட்ட கையெழுத்து இதழும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை மெய்ப்பித்தன.
கெஞ்சுவ தில்லை பிறர்பால்! அவர்தம் கேட்டினுக்கும்
அஞ்சுவ தில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை; புவியில் எவரும் எதிர்நின்றே.
என்ற பாடல் வரிகள்தென்மொழி முதல் இதழில் முகப்புப் பகுதியில் இடம்பெற்ற வரிகளாகும். இவ்வரிகள் பாவலரேறு யார்? என்பதையும், இறுதி மூச்சுவரை தம் இயக்கம் எவ்வாறு அமையும் என்பதையும் கட்டியமாகக் கூறும் பாடலாகும்.

தென்மொழி முத்தாய்ப்பான 7 கொள்கைகளை வகுத்துக்கொண்டு அத்தடத்திலேயே வழிநடந்தது. அவற்றின் சாரம் :

1.      தமிழ் நிலத்துள் தமிழே ஆட்சி மொழி ஆதல் வேண்டும். மாநில இணைப்பு மொழியாகவும், உலகத் தொடர்பு மொழியாகவும் இருக்கத் தகுதியுடைய மொழி ஆங்கிலமே. பல்துறைக் கல்வியும் தமிழிலேயே பயிற்றுவிக்க வேண்டும்.
2.      தமிழ்நாட்டுள் தமிழர்க்காக நடத்தப்பெறும் இதழ்களில், எழுதப்பெறும் நூல்களில் தூய தனித்தமிழே வழங்கப் பெற முயற்சிகள் செய்தல்.
3.      தமிழக அரசியல் கட்சிகள் தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் செய்துவரும் தொண்டில் போலியும், பொய்மையும் கலவா வண்ணம் கூர்ந்து கவனித்து, தேவையான பொழுது கண்டிக்க நடுநிலைக் குழு அமைத்துச் செயற்படல்.
4.      தனித்தமிழ் நூல்கள் வழி மொழியை வளர்த்தல், அறிவியல் நூல்கள் வெளியிட்டு மக்களின் பல்வகை அறியாமையை நீக்குதல், இதன்வழி உலகத் தமிழரோடு பிற நாட்டவருடனும் தொடர்பு கொள்ளல்.
5.      சாதியத்தை ஒழிக்கும் வகையிலும் அரசியல், பொருளியல் துறைகளில் மக்கள் ஏமாற்றம் அடையாதவாறு விழிப்பூட்டுதல்.
6.      தமிழரின் உரிமை கெடநேரின் தனிநாடு கோரிக்கையைத் தீவிரப்படுத்தல்.
7.      மேலே குறிப்பிடப்பட்ட கொள்கைகள் கெடாத வண்ணம் தொடர்ந்து செயற்பட நிலையான அமைப்பை ஏற்படுத்தி உழைப்புள்ளம் கொண்ட அறிஞரைப் பங்கேற்கச் செய்தல்.

மாதத்திற்கு இரண்டு இதழ்கள் கால அளவில் வெளியிடப்பட்ட தென்மொழி 15 இதழ்களுடன் இடைநின்றது. குறைந்த முதலீட்டினாலும் பொருளியல் நலிவினாலும் விளம்பரம் முதலான வருவாய் இல்லாததாலும் பாவலரேறுவினால் இதழைத் தொடர்ந்து நடத்த இயலாமற் போனது. அந்தப் பதினைந்து இதழ்களில் இலக்கியம் - இலக்கியத் திறனாய்வு குறித்துப் பதினெட்டுக் கட்டுரைகளும், மொழி வளர்ச்சிக் குறித்து 21 கட்டுரைகளும், வரலாறு குறித்து 5 கட்டுரைகளும், அரசியல் குறித்து 7 கட்டுரைகளும் என  53 ஆக்கம் நிறைந்த கட்டுரைகளும், இயற்கை, குழந்தைகள் பற்றிய பாடல்கள், காதல் பாடல்கள், அரசியல் குறித்த பாடல்கள், மொழியாக்கப் பாடல்கள், புதுமுறைப் பாத் தொடரிலக்கியங்கள் என 72 பாக்களும் வெளிவந்தன. மேலும், நூற் சுருக்கம், சிறுகதைகள், நாடகங்கள் என அனைத்துத் துறைகளும் நிரம்பிய முழுமைபெற்ற இதழாகத் தென்மொழி மிளிர்ந்தது. (தென்மொழியின் தொண்டு, .அருளி, .15-16, 1993)

மீண்டும் துடிப்புடன் வெளிவந்த தென்மொழி

பொருட் செல்வத்தின் குறைவினால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட தென்மொழியைத் தமிழர்கள்மேல் வைத்த நம்பிக்கையினாலும் கொள்கையைத் தொடர்ந்து செயற்படுத்த வேண்டும் என்ற உந்துதலினாலும் மீண்டும் கொண்டு வந்தார். தென்மொழி புதுப்பொலிவுடன் வந்தார். தென்மொழி புதுப்பொலிவுடன் 14.02.1963 முதல் மீண்டும் வெளிவரத் தொடங்கிற்று. இதழின் சிறப்பாசிரியராக மொழிஞாயிறு பாவாணர் அவர்களும், பொறுப்பாசிரியராகப் பாவலரேறும் பொறுப்பேற்றனர்.

பொருள் குறைபாட்டால் நசிவுற்று மீண்டு வந்த தென்மொழி முன்பைவிட வீரியமுடன் செயல்படத் தொடங்கிற்று.
இந்தி திணிப்பை எதிர்த்து உரிமைக் குரல் கொடுக்கத் தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுத்து, இந்தியத் தலைமை அமைச்சர் திரு. இலால்பகதூர் சாத்திரிக்கும், தமிழக முதல்வர் திரு. பக்தவச்சலத்திற்கும் கட்சிச் சார்பின்றி மடல்கள் எழுதி அனுப்பவும் அக் கடிதத்தின் ஒரு படி  தென்மொழியின் கடலூர் முகவரிக்கும் அனுப்பிவைக்குமாறு தமிழ்க் கழகங்கள், மன்றங்கள், தமிழ்ப் புலவர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் தமிழ்நலம் காக்கத் துடிக்கும் அனைவருக்குமான அறிவிப்பாக வெளியிட்டது. எதிர்ப்புக் கடிதத்தில் இடம்பெற வேண்டிய அறிக்கையையும் தென்மொழியில் வெளியிட்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் படி எடுத்து அனுப்புமாறு வேண்டகோள் வைத்தது. பாவலரேறு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு அமைந்தது.
அரசியல் சாராத நடுநிலையாளர் தம் இந்தி எதிர்ப்பின் உரிமைக்குரல்!
பெறுநர்,

இந்திய அரசின் தலைமைப் பொறுப்பாளரே!
வணக்கம். நாங்கள் விருப்பமின்றியே உங்கள் ஆளுகைக்குட்பட்ட தென்னகம் வாழ் மக்கள். அத்துடன் நாங்கள் எவ்வகையான அரசியல் கொள்கையும் சாராத நடுநிலையாளர்கள்; எங்கள் மொழியையும் பண்பாட்டையும் எங்கள் உயிரினும் மேலாக மதிப்பவர்கள். மொழிவழியாகவும் அரசியல் வழியாகவும் வருகின்ற அடிமை வாழ்வை வெறுப்பவர்கள்.
அண்மையில் தங்களால் கொண்டுவரப்பெற்ற இந்தி மொழித் திணிப்பு என்னும் வலிந்த, விடாப்பிடியான, பிறர் நலங் கருதாத, இரக்கமற்ற ஒரு கொள்கையால், இன்றைக்கும், இனி என்றைக்கும் ஊறு  செய்யப்பட்டவர்கள். எங்கள் நல்வாழ்வும், உரிமை வாழ்வும் நீங்கள் திணிக்கின்ற இந்தி மொழியால் கெடும் என்று நாங்கள் திட்டமாய் நம்புகின்றோம். இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இச்செயல் உகந்ததும் அன்று என்று உறுதியாகக் கூறுகின்றோம். இவ்விந்தித் திணிப்பால் நீங்கள் எதிர்பார்க்கின்ற நன்மை கடுகத்துணையும் ஏற்படப் போவதில்லை.
ஆதலால் எங்கள் ஒரு முகமான குரலை, எங்களுக்குள்ளே உரிமையின் பெயரால், உங்களிடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எங்கள் விருப்பமின்றிறே நீங்கள் எங்கள்மேல் வலிந்து திணிக்கின்ற இந்தி மொழியை நாங்கள் துளியும் விரும்பவில்லை என்று உங்களுக்கு இதன்வரி உணர்த்திக் கொள்ளுகின்றோம். இவ் வேண்டுகோளைப் புறக்கணித்து மேன்மேலும் அவ் விந்தி மொழி எங்கள்மேல் திணிக்கப்பட்டு, எங்கள் உரிமைக்குக் கேட செய்யுமானால், அதனால் எங்கள் உள்ளங்களில் கிளர்ந்து கொண்டிருக்கின்ற வெறுப்புக்கும், மறுப்புக்கும், எதிர்ப்புக்கும் இவ்வரசு தலைகொடுக்க வேண்டியிருக்கும் என்றும் முன்னடியாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
இதற்காவன செய்வீர்கள் என்று நம்புகின்றோம்.
                                                                                        இப்படிக்கு
உங்கள் அரசியல் திறமையிலும் முன்னறிவுத் திறத்திலும்
 நம்பிக்கையுள்ள தென்னகக் குடிமக்கள்.
என்று இதன் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்திலும் இணைத்து வெளியிட்டார்.  அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு பின்வருமாறு- 

Voice raised against Hindi from the south by Non - political people

To,

The Head of Government of India.
We beg to tell you that we are people from the south who are unwillingly subject to your domination. We are not party - people professing particular doctrines of any political party. Nor arre we sympathizers such political parties. We are the general public. We are proud of our Language and culture, and we value them more than our lives. We do not want to lead the life of slaves, being subjected to linguistic and political domination.
We are a great deal harmed, and will be harmed still more, by the recent Hindi policy of the Government. Which we look upon as an arbitrary, obstinate inconsiderate and merciless one, We firmly belive that Hindi is dangerous to our welfare and freedom. We would, with convication, say that this policy of force is not good for the National and Emotional integration of which you so highly speak. We are certain that you can never achieve what you aim at by forcing Hindi on us directly of indirectly against our wishes.
Hence, we from the South join together and, in the name of our political rights, raise our unanimous voice against Hindi. We want to impress on you most deeply that we in the south have no inclinationat all for Hindi which you so arbitrarily and despotically compel us to learn, and that you are incurring our bitterness and displeasure on this account. If you ignore this earnest and genuine request of ours and go on with your scheme, and try to deprive us of our most cherished freedom, we warn you that your leadership will create unnecessary hatred in us, and will soon have to meet with our unanimous remonstrance and resistance. Hope you will do what is needed,
Yours truly,
People of the South who believe in your political wisdom and forethought.

பாவலரேறுவின் வேண்டுகோளை ஏற்று, ஐம்பதினாயிரம் மடல்கள் எழுதி அனுப்பப் பெற்றன. இதழ்களின் வரலாற்றில் தென்மொழி உண்டாக்கிய மாபெரும் அதிர்வலைகளுள் இதுவும் ஒன்றாகும். தென்மொழி இதழானது இயக்கமாக கட்டமைக்கப்பெற்றது. அதற்கென கொள்கைகள் வரையறுக்கப்பட்டன. ‘தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடுஎன்கிற தலைப்பில் தமிழக விடுதலை மாநாடும் நடத்தப்பெற்றன.

தென்மொழியின் பல்வேறு பணிகள்

          எழுத்துக்கான களமாக விளங்கிய தென்மொழி பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் முன்னெடுத்தது. அவற்றுள் குறிக்கத்தக்கது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டமாகும். தமிழின் தொன்மை - மேன்மை - பழமை - உலகிற்கு அளித்துள்ள கொடை - உலகம் பரவிய தமிழின் வேர் என்பனவற்றை உலகோர் அறிந்துகொள்ள வகைச் செய்யும் அகரமுதலியை உருவாக்க வல்லப் பாவாணரின் ஆழ்ந்த புலமையைத் தமிழக அரசு பயன்கொள்ளத் தவறியது. அரசால் அத்திட்டத்திற்குப் பயனில்லை என்பதை உணர்ந்த பாவலரேறு, 1970 திசம்பர் இதழில் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உருவாக்க வெளியீட்டுத் திட்டத்தை அறிவித்தார். அதற்காக 27 பக்க அளவில் அறிக்கையும் வெளியாயிற்று. அதன்படி திட்ட உறுப்பினராக விரும்புவோர் ஒவ்வொரு மாதமும் ரூ.10/- பாவாணருக்குத் தொடர்ந்து ஐந்தாண்டுகள் அனுப்ப வேண்டுமென்று அறிவிக்கப்பெற்றது. அதன்படி 206 பேர் உறுப்பினராகச் சேர்ந்து மாதந்தோறும் தொகை அனுப்பினர். அந்தத் தொகையின்மீது கட்டி எழுப்பப்பட்டதே செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டமாகும். அதற்கான அடித்தளத்தை அமைத்துத் தந்தது தென்மொழியேயாகும்.

          இவை மட்டுமன்றி, பாவாணர் நலிவுற்றிருந்தபொழுதும், பன்மொழிப் புலவர்
கா. அப்பாதுரையார் நலிவுற்றவேளையிலும், தென்மொழி அந்த அறிஞர்களுக்குத் துணைநின்றது. தென்மொழி உறுப்பினர்களிடம் அவர்களுக்காகப் பரிந்துபேசி அவர்களின் நசிவை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டது.

          பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மறைவுக்குப்பின் வாடிய அவருடைய குடும்பத்திற்குபாவேந்தர் குடும்ப நலக்கொடைஎன்று அறிவிப்பு செய்து நன்கொடை பெற்றுத்தந்தது. ஆக தென்மொழி கருத்தளவில் எவ்வளவு தீவிரத் தன்மையுடன் விளங்கியதோ அதே அளவு செயலாற்றுவதிலும் தம் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தியது.

          தென்மொழி தீவிர மொழிப்பற்றுடன் செயலாற்றியது. அதனுள் இடம்பெற்ற கட்டுரைகள், பாக்கள், படைப்புகள் யாவும் பிறமொழி கலவாத தனித்தமிழ் மொழியிலமைந்தன. கருத்துகள் யாவும் மொழி, இன நலனுக்கு உகந்தனவாகவே அமைந்தன. இதில் படைப்பாளர்களாகவும், கட்டுரையாசிரியர்களாகவும் செயல்பட்டவர்களும் மொழித் தூய்மையில் சற்றும் தளராமல் வினையாற்றினர். தென்மொழி - பாவலரேறுவின் வெற்றி, இதனைப் படித்த அனைத்து நல்லுள்ளங்களிலும் தனித்தமிழின் உணர்வை, மொழி ஈடுபாட்டை எளிதாகக் குடியேற்றம் செய்தது.

          என்மொழியை என்னினத்தை மாற்றானிடம்
          இட்டுவிட்டுச் சோம்பிவிட உள்ளம் இசையேன் - அவன்
          எடுத்தெறியும் காசுக்கிரு கைகள் பிசையேன் - என்
          தென்மொழியை கண்ணொளியை மூச்சுயிர்ப்பைச் சாகும்வரை
          தேர்ந்த உயிர்த் தொண்டெனவே ஆற்றிவருவேன் - வாழ்வு
          தீர்ந்துவிடின் வேற்றுடலம் மாற்றி வருவேன்!

என்ற வரிகள் தென்மொழியின் மீது பாவலரேறு கொண்டிருந்த பற்றின்ஈர்ப்பின் வெளிப்பாடாகும். அவ்வாறே தாம் இவ்வுலக வாழ்வை முடிக்கும் வரை தென்மொழியைச் செம்மையுடன் நடத்தினார். பல்வேறு இன்னல்களுக்கிடையேயும் தென்மொழி இடையறாமல் வெளிவரவேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தார். ஊடகத்தின் வலிமை - கடமை போன்றவற்றை நன்குணர்ந்த பாவலரேறு, தென்மொழியை அதன் சரியான விசையில் செலுத்தினார். தென்மொழியில் வெளியிடப்பட்ட கட்டுரைகளும், பாக்களும் சமகால சமூகத்தின் வெளிப்பாடாக அமைந்தன.

          உள்ளமோ ஓட்டைப் பானை
          உணர்வெலாம் அணைந்த கொள்ளி
          கள்ளமும் கரவும் போட்டுக்
          கயமையைக் கலந்து பொங்கி
          எள்ளலும் இழிவும் சேர்த்தே
          இகழெனும் இலையி லிட்டுக்
          குள்ளமும் குருடும் கூடிக்
          குதித்திடல்பொங்கல்ஆமோ?

என்ற பாடல் 1965 சனவரி பொங்கல் இதழில் வெளியான பாடலாகும். தமிழர்கள் தங்களின் இன நலத்தைப் பற்றிக் கவலைபடாமல் விழாக்கள் கொண்டாடுவதில் குறிக்கோளாய் இருப்பதைக் கண்டித்து எழுதப்பட்ட பாடலாகும். இஃதன்றி பாவலரேறுவின் கனிச்சாறு பாத்தொகுப்பில் அமைந்துள்ள பாடல்களில் பெரும்பான்மையான தென்மொழியில் வெளியானவை ஆகும். அருபருவத் திருக்கூத்து, கற்பனை ஊற்று, பாவியக் கொத்து, எண்சுவை என்பது போன்ற தனி இலக்கியங்கள் தென்மொழியில் முதலில் வெளியான பின்னர், தனி நூலாக ஆக்கங்கண்டன.

          தமிழுக்கும் தமிழர்க்கும் எதிராக நடந்தேறும் நிகழ்வுகளைக் கண்டிப்பதற்குத் தென்மொழியின் ஆசிரியவுரைப் பகுதியை வாகாகப் பயன்படுத்தினார் பாவலரேறு. வீணான போற்றியுரைகள், பயன்தராத பாடல்கள், கட்டுரைகள் என்பன விலக்கப்பட்டன.

          திரைப்படத்தின் தாக்குரவு தென்மொழியில் தலைகாட்டா வண்ணம் பார்த்துகொண்டார் பாவலரேறு. அவர் மறைவுக்காலம் வரை வெளியான இதழ்களில் பூம்பூகார், காதலிக்க நேரமில்லை, கிழக்கே போகும் இரயில், உதிரிப் பூக்கள் என்னும் நான்கு திரைப்படங்களுக்குத் தமிழிய உணர்வுடன் கலந்த ஆக்கப்பூர்வமான விமரிசனம் வெளியானது. பாவலரேறுவின் மறைவுக்குப் பின்தவமாய் தவமிருந்துஎன்ற ஒரே ஒரு தமிழ்த்திரைப்படத்திற்கு மட்டுமே திரைப்பட விமரிசனம் தமிழ் உணர்வுகளின் பிரதிபலிப்பாக அமைந்தது.

தென்மொழிஇதழ் குறித்துப் பிற இதழ்கள்

          தென்மொழி வெளிவந்த சமகாலத்தில் தமிழில் பல இதழ்கள் வெளியாயின. அவ்வாறு வெளியான பல இதழ்கள் தென்மொழியின் மேன்மைதகு பணியை வெகுவாகச் போற்றிப் பேசின.

          ‘‘தென்மொழி, ஆழ்ந்த துயிலிற் கிடக்கும் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி உணர்ச்சியூட்டும் தன்மையில் தனக்குத்தானே நிகரானது. எல்லா வகையானும் சாலச் சிறந்த இதனை வரவேற்கிறோம்’’ என்று செந்தமிழ்ச் செல்வி போற்றியது (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 24, பரல் - 2 1969).

          விடுதலை நாளிதழில் (21.04.1960) குத்தூசி அவர்கள் மதவெறியையும், சாதி வெறியையும் தாக்கி உடைக்கும் சரியான தமிழ்க் கோடரி என்று கூறி, முத்தமிழ் வளர்ச்சிக்காக - தனித்தமிழ் வளர்ச்சிக்காக - தன்மான உணர்ச்சிக்காக - பகுத்தறிவு வளர்ச்சிக்காக - நீ செய்யும் தொண்டு வீணாகாது என்று தென்மொழி ஏடே உன் ஆசிரியர் பெருஞ்சித்திரனாரிடம் சொல்வாயா?’’ என்று தென்மொழியையே தூதாக்கினார்.

          தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் மொழித் துறைத் தகுதிவாய்ந்த தனித்தமிழ்த் தாளிகை என்று சிங்கப்பூர் தமிழ் முரசு நாளேடு (13.09.1950) புகழ்மாலை சூட்டிற்று ‘‘தென்மொழியைப் பேணிக்காப்பது தமிழ் மக்களின் கடமை’’ என்று நவ இந்தியா நாளேடும், ‘‘தன்மொழிக்கும், பிற மொழிக்கும் வேற்றுமை தெரியாது தன் மொழியென எண்ணிப் பிற மொழியைப் போற்றித் தமிழ் மொழியை அழித்து வரும் இழிநிலையில் கிடந்துழலும் தமிழ் மக்களுக்குத் தூய தமிழைத் துலக்கிக் காட்ட மலர்ந்திருக்கும் தென்மொழி தமிழரின் மாமருந்து’’ என்றுபகுத்தறிவுஎனும் திங்களிதழ் (1963) மகுடம் சூட்டியது.

          எந்த நோக்கினை முன்வைத்துத் தென்மொழி தொடங்கப்பட்டதோ, எம்முறையில் அதன் கட்டமைப்பு அமைய வேண்டும் என்று பாவலரேறு விரும்பினாரோ, அந்த அடிப்படை அவர் மறைவுக்குப் பிறகும் வழுவாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தனித்தன்மை மாறாமல் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஓர் இதழ் வெளியிடப்படும் பெருமை தென்மொழிக்கே உரியது. தென்மொழிதான் அட்டையில் பாடல்களை வெளியிட்டுப் புதுமை செய்தது. தொடக்கத்தில் பாவலரேறு அவ்வக்காலத் தேவைக்கேற்ப பாக்கள் புனைந்தார். அவரின் பாடல் அட்டையை அணிசெய்தது. பாவலரேறுவின் மறைவுக்குப்பின் திருக்குறள்மணி இறைக்குருவனார் அவர்களும், அவரின் மறைவுக்குப்பின் சொல்லாய்வறிஞர் அருளியார் அவர்களும் அட்டையில் இடம்பெறும் பாடலினைப் புனைந்து வருகின்றார். உள்ளட்டையில் பாவலரேறுவின் பாடல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நுட்பமான மொழி ஆய்வுடன் குறிப்பிடத்தக்கக் கட்டுரைகள் வெளிவருகின்றன. உள்ளார்ந்த நிலையில் மொழி, இனப்பற்றுக் கொண்ட தமிழ் அறிஞர்கள் தொடர்ந்து தென்மொழியில் பங்களிப்புச் செய்து வருகின்றனர்.

தமிழ்ச் சிட்டு

          இலக்கியமானாலும் வேறெந்த படைப்பாயினும் யாவருக்குமானதாக அமைய வேண்டுமென்ற பேரவா கொண்டவர் பாவலரேறு. ஆகவே, தென்மொழியின் வாயிலாக வளர்ந்த தலைமுறையினர்க்குத் தமிழுணர்வூட்டியதைப் போன்று இளந்தலைமுறையினரும் தமிழுணர்வும், மொழியாற்றலும் பெற வேண்டுமென்ற விழைவின் வெளிப்பாடாகத் ‘‘தமிழ்ச்சிட்டு’’ என்னும் பெயரில் சிறுவர்களுக்கான இதழினைத் தொடங்கினார். தமிழ்ச்சிட்டு முதலில்தேன்கூடுஎன்ற பெயரில் வெளியிட எண்ணி, விளம்பரம் வெளியிடப்பட்டது. ஆனால் இதழ்ப் பதிவு நிலையில் தமிழ்ச்சிட்டு என்ற பெயரில் பதிவு கிடைத்து வெளியிடப்பட்டது.

          பாவலரேறு தம்முடைய நேர்காணல் ஒன்றில், தமிழ்ச்சிட்டு எந்தப் பின்னணியில் தொடங்கப்பெற்றது என்ற வினாவிற்குப் பின்வருமாறு விடை பகர்ந்தார். ‘‘1959இல் தென்மொழி என்னும் தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழ்த் தொடங்கி, பின்னர் கல்லூரி மாணவர்களிடத்திலும் ஓரளவு கற்றவர்களிடத்திலும் மொழி, இலக்கியம், பண்பாடு, குமுக நிலை ஆகிய துறைகளில் அதன் கருத்துகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனினும் உயர்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவர்களிடத்தில் அது பெருமளவு பரவவில்லை. எனவே, அவர்களுக்கென்று தென்மொழியின் நடையில் சிறிது எளிமையும், இளம் மாணவர்களுக்குத் தேவையான கலை, அறிவியல், வாழ்வியல் கருத்துகளைத் தாங்கிச் சிறுவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் தூய தமிழில் ஓரிதழைத் தொடங்க வேண்டும் என்று கருதினேன். அக்கருத்து 1965 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கி, தமிழ்ச்சிட்டு என்னும் இதழுருவில் வடிவம் பெற்றது.’’ (பொழிலன், பாவலரேறுவின் வாழ்க்கைச் சுவடுகள், .  ).

          இளையோர் மனத்தில் நற்கருத்துக்களையும் நல்லறிவையும் ஊட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளின் விளைநிலமாகத் தமிழ்ச்சிட்டு அமைந்தது. மாணவ மனம் எவ்வளவு கொள்ளுமோ, மாணவப் பருவத்திற்கு எவை தேவையோ அவற்றை அறிந்து அளவுடன் அளிக்க முற்பட்டுச் செயலாற்றியது. ஒரு குறிப்பிட்ட தடத்திலேயே நடந்திடாமல் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிச் சம அளவில் வெளிவந்தது.

          தமிழ்ச்சிட்டு 1966 முதற்கொண்டு 1994 ஆம் ஆண்டு வரை மொத்தம் 217 இதழ்கள் வெளியிடப்பட்டன. அரசினரால் தென்மொழி தடை செய்யப்பட்டதால் 1975 ஆம் ஆண்டில் செபுதம்பர் முதல் திசம்பர் வரையிலான தென்மொழி இதழ் தமிழ்ச்சிட்டின் வடிவில் தென்மொழியின் கருத்துகளைத் தாங்கி வெளிவந்தது. பள்ளிப்பறவைகள், செயலும் செயல்திறனும், இளமை விடியல், இளமை உணர்வுகள், கழுத அழுத கதை ஆகியவை தமிழ்ச்சிட்டு இதழில் தொடர்களாக எழுதப்பெற்றுப், பின்னர் தனி நூல்களாக ஆக்கங்கொண்டன. பாவலரேறுவின் மறைவுக்குப்பின் சில ஆண்டுகள் வெளிவந்த தமிழ்ச்சிட்டு பின்னாளில் நின்று போனது இளையோர்க்குப் பேரிழப்பாகும்.

தமிழ் நிலம்

          தென்மொழி, தமிழ்ச்சிட்டு என்னும் இரு இதழ்கள் ஏற்கெனவே பாவலரேறுவின் பெருமுயற்சியால் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில் அவ்விரு இதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அரசியல் நிலைகளுக்காகவே இதழொன்றைத் தொடங்க வேண்டுமென்ற பேரவா கொண்டார் பாவலரேறு. அதன்படிஅரசியல்என்னும் தலைப்பில் இதழ் கொணர எண்ணி அதற்கான அறிவிப்பும் வெளியிட்டார். ‘அரசியல்என்னும் தலைப்பில் கொணர முடியாமல்தமிழ் நிலம்என்னும் பெயரைத் தாங்கி 07.11.1982 அன்று முதல் வார இதழாக வெளிவந்தது. 1981 ஆம் ஆண்டு உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது அதற்குரிய இதழாகவே தமிழ்நிலம் வெளியிடப்பட்டது.

          தமிழ் நிலம் உங்கள் இதழ்! உங்கள் சொத்து!
          உங்களுக்கு உரிமை பெற்றுத் தரும் படைக்கலம்!
          ஒவ்வோரிதழும் தமிழ்நில உரிமைக்கு ஒருபிடி
          எருவாக உதவுதல் வேண்டும்

என்று தமிழ்நிலத்தில் உருவாக்கக் காரணத்தைப் பா வடிவில் வெளியிட்டார். அஃதன்றி உலகமெல்லாம் பரவியிருந்த தமிழர்கள் பொறுப்பாசிரியர் - உறுப்பாசிரியர் - புறப்பாசிரியர் - கட்டுரையாசிரியர் - செய்தியாசிரியர், விளம்பர குழுவினர், ஓவிய ஆசிரியர் என்ற வகையில் தமிழ் நிலத்தின் ஏற்றமிகு பொறுப்புகளைத் திறம்பட ஆற்றுவதற்கு பாவலரேறுவால் நியமிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.

          தமிழ் நிலத்தைப் பெரிய எண்ணிக்கையில் அச்சிட்டு, பரவச் செய்ய ஆர்வம் மிகுந்திருந்தார் பாவலரேறு. எனினும் போதிய அளவு பொருள்பலம் கொண்டிராத பாவலரேறுவால் இவ்விதழைத் தொடர்ந்து இயங்கச் செய்வதில் பெரும் சிரமமேற்பட்டது. தொடக்கத்தில் எட்டு இதழ்களே தவறாமல் வெளிவந்தன. பின்னர் மாதத்திற்கு இரண்டு இதழாகவும், பின்னர் மாத இதழாகவும் வெளியானது. பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் எப்பாடு பட்டாகிலும் இதழை வெளியிட வேண்டுமென்ற பாவலரேறுவின் விடாப்பிடியான உள்ளத்திற்கு ஏற்ப அவரின் செயல்பாடுகளும் அமைந்தன. ஆனால் பாவலரேறுவின் மறைவிற்குப்பின் சில இதழ்களோடு தமிழ்நிலம் நின்று போனது.